Rock Fort Times
Online News

மூன்றாண்டு சாதனை மற்றும் நிதிநிலை அறிக்கையை பொதுமக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 26ம் தேதி முதல் திண்ணை பிரசாரம்…

திமுக தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்த கொண்ட ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், செந்தில், சபியுல்லா, லீலாவேலு, கிழக்கு தொகுதி பார்வையாளர்கள் ஈரோடு பிரகாஷ், திருவெறும்பூர் தொகுதி பார்வையாளர் சீ.கா.மறைமலை மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* மத்திய பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தி, ‘இந்தியா வெல்லட்டும்’ என்ற உயர்ந்த நோக்குடன் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை கழகத் தலைவர் தொடங்கி வைத்துள்ளார். அவரது, ஆணைக்கிணங்க இக்கூட்டங்களை சிறப்பாக நடத்தி முடித்துள்ள கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் இக்கூட்டம் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறது.

* மத்திய அரசு, தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியைக் கூடத் தராமல் வஞ்சிக்கும் சூழலில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம், குடிசை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க 8 லட்சம் வீடுகள் கட்டித் தரும் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம், வறுமை இல்லாத் தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக 5 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டம் உட்பட எண்ணற்ற திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, திராவிட மாடலை உலகமே பாராட்ட செய்து வரும் முதலமைச்சரின் சீரிய நிர்வாகத் திறனையும், வழிகாட்டும் பாங்கையும் கூட்டம் மனமார வாழ்த்தி நன்றி பாராட்டுகிறது.

* திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதேசமயம் மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், பிப்ரவரி 26ம் தேதியன்று ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திண்ணைப் பிரசாரத்தை தொடங்குவது என கூட்டம் தீர்மானிக்கிறது.

* மார்ச் 1-ஆம் தேதியன்று கழகத் தலைவர் 71ம் பிறந்தநாள் ஆகும். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அவர், கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்த பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார். தந்தை பெரியாரின் சமூகநீதியையும், பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையையும், தமிழினத் தலைவர் கலைஞரின் சமூகநலத் திட்டங்களையும் மனதில் தாங்கி திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கும் அத்தகைய பெருமைமிகு தலைவரின் பிறந்தநாளை நாம் அனைவரும் கொண்டாடும் விதமாக திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் தலைமைக் கழக அறிவிப்பின்படி நடத்திடுவது எனவும் இந்த கூட்டம் மகிழ்வோடு தீர்மானிக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்