திருச்சி அரசு மருத்துவமனையின் தரத்தை மேலும் உயர்த்திட முயற்சிப்பேன்- ஆய்வுக்குப் பின்பு துரை வைகோ எம்.பி….!
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று(29-10-2024) காலை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அவரை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் குமரவேல் மற்றும் கண்காணிப்பாளர்கள் டாக்டர் உதய அருணா, டாக்டர் அருண்ராஜ் மற்றும் துறைத் தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் இதயவியல் பிரிவு, புற்றுநோய் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, பொது மருத்துவப் பிரிவு மற்றும் பல் மருத்துவப் பிரிவு , அறுவைச் சிகிச்சை பிரிவு போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, இருதயநோய்க்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதனால் இருதய அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்படவேண்டும். புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் ரேடியேசன் தெரபி மற்றும் ஹீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்கும் விரிவான ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி டீன் குமரவேல் தலைமையிலான அரசு மருத்துவர்களிடம் துரை வைகோ எம்.பி.ஆலோசனை நடத்தினார்.
பொதுமக்களின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பாக பணியாற்றி வருகின்றார். என்னைப் பொறுத்தவரை உங்களுக்குத் தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் நோயாளிகள் எதிர்பார்ப்பு இவற்றை அரசுக்கு தெரிவிப்பேன். அரசுக்கும், மருத்துவமனைக்கும் ஒரு பாலமாக இருந்து திருச்சி அரசு மருத்துவமனையின் தரத்தை இன்னும் உயர்த்திட முயற்சிப்பேன் என்றார். இதுதவிர மருத்துவ மனையில் நாளுக்கு நாள் வருகைதரும் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையையும் அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்வேன் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மதிமுக துணைப் பொதுச்செயலாளர்கள் டாக்டர் ரொஹையா, தி.மு.இராசேந்திரன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
Comments are closed.