Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி, பாஜகவினர் முற்றுகைப் போராட்டம் – பக்தர்கள் அவதி…(படங்கள்)

  திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் இன்று    (12.12.2023) காலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காா்த்திகை மண்டபத்தில் வாிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் கோவிந்தா, கோவிந்தா என அங்கிருந்த உண்டியலில் தாளம் போட்டபடி கோஷமிட்டு உள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவில் பணியாளர்கள் கோஷமிட வேண்டாம், தாளம் போட வேண்டாம் என கூறியுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோவில் பணியாளர்கள் ஐயப்ப பக்தர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், ராம் , ஷ்யாம் என்ற ஐயப்ப பக்தா்களுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்தகாயம் அடைந்த ஐயப்ப பக்தா்கள்   கார்த்திகை கோபுரம் அருகே தரையில் அமா்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.  மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி  மற்றும் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்குள் நடந்த இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

                   

 

                           

இந்நிலையில், ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ரெங்கா ரெங்கா கோபுரம் முன்பு இந்து முன்னணி திருச்சி மண்டல அமைப்பாளர் போஜராஜன், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு செயலாளர் சேதுராமன், பாஜக திருச்சி மாநகா் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், கோவில் இணை ஆணையா் மாரியப்பனை சந்திக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றனர். அதற்கு போலீசார், அவ்வளவு பேரையும் அனுமதிக்க முடியாது, முக்கிய நிர்வாகிகள் மட்டும் சந்திக்க கூறினர்.

இதுதொடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது . அதன் பின் நிர்வாகிகள் ஐந்து பேர் மட்டும் கோவில் இணை ஆணையரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அறநிலையத்துறை அலுவலகத்தில் இணை ஆணையர் இல்லாததால் மீண்டும் ரெங்கா ரெங்கா கோபுரம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை . இதனால், பக்தர்கள் அவதி அடைந்தனர்.

                   

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்