Rock Fort Times
Online News

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முதியவர் மற்றும் போலீசாரை அரிவாளால் வெட்டி ரகளையில் ஈடுபட்டவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

திருச்சி, திருவானைக்காவல் 5ம் பிரகாரத்தை சேர்ந்தவர் காஜாமைதீன் (63). சமையல் தொழிலாளியான இவர், ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். அவரை நோட்டமிட்ட மதுபோதையிலிருந்த மர்ம நபர்கள் 4 பேர் காஜாமைதீனிடம் இருந்த பணப்பையை பறித்து சென்றனர். இதில் ஒருவரை பிடித்த காஜாமைதீன், சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்க இழுத்துச்சென்றார். அப்போது அவரை அந்த மர்ம நபர், அரிவாளால் வெட்டியுள்ளார். இதைக்கண்ட போலீசார் அந்த இளைஞரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது அவர் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றி ரகளையில் ஈடுபட்டார். பின்னர் அவரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர். இதில், ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதில் இளைஞர் காயமடைந்தார். அதேபோல இளைஞரை பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளர்கள் ராஜா, பிரேம்ஆனந்த் மற்றும் அரிவாளால் வெட்டுப்பட்ட முதியவரும் காயமடைந்தனர். இதில் இளைஞர் மற்றும் வெட்டுப்பட்ட முதியவர் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உதவி ஆய்வாளர்கள் முதலுதவி சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் ரகளையில் ஈடுபட்ட திருச்சி கோட்டை சிந்தாமணி அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த எம். அபிஷேக் (23) என்பவரையும், வழிப்பறி செய்து தப்பிய கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கே. குரு (20), காந்திமார்க்கெட் பகுதியைச் சேர்ந்த அ.தவ்பிக் (19), அரியமங்கலத்தைச் சேர்ந்த எம். அபுபக்கர் சித்திக் (19) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இதில் அபிஷேக் மீது கோட்டைகாவல் நிலையத்தில் மேலும் பல வழக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டுவந்துள்ளார். எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என கோட்டை போலீஸார் சிட்டி போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரைத்தனர். பரிந்துரையை ஏற்ற மாநகர காவல் ஆணையர் என். காமினி, அபிஷேக்கை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்