சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சுமார் 20 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை மற்றும் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்கையில், 15ம் தேதிக்குள் அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட்ட அறிக்கையில், 11.09.2026 முதல் 14.09.2026 வரையிலான தொடர் விடுமுறை நாட்கள் இருந்தபோதிலும், 19,71,015 பயனாளிகளுக்கு பண்டிகைக் காலத்திற்குள் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட தொகையை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு துறைகள், நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இடையே தமிழ்நாடு அரசு விரிவான மற்றும் மிக சிறப்பாக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் விளைவாக பயனாளிகளுக்கு ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத் தொகை மொத்தம் ரூ.238.76 கோடி ஆகும். இதில் இந்திய அரசின் பங்களிப்பு ரூ.52.81 கோடி, தமிழ்நாடு அரசின் கூடுதல் ஓய்வூதியத் தொகை 185.95 கோடி ஆகும். பல்வேறு இடர்பாடுகளை கடந்து அவர்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.