நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.ஏ.செங்கோட்டையன். தற்போது அமைச்சராகவும் உள்ளார். அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வேட்புமனுத் தாக்கலின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் முறைகேடுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டி, அந்த வெற்றியை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று(15-09-2026) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அமைச்சர் செங்கோட்டையன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மூலம் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டே மனுத் தாக்கல் செய்யப்பட்டு முறையான வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி பெறப்பட்டது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க எந்தவிதத் தகுதியும் இல்லை என்பதால், இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, செங்கோட்டையன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் உள்ள நியாயங்களை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையன் பெற்ற வெற்றி சட்டப்பூர்வமாகச் செல்லும் என நீதிபதி உறுதி செய்ததுடன், அதிமுக வேட்பாளர் பிரபு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Comments are closed.