Rock Fort Times
Online News

அனைத்துப் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பயணம்: முதல்வர் விஜய் ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(ஜூன் 17) போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்துவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். மேலும், போக்குவரத்துத் துறையில் அடுத்த ஓராண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டுகளில் செயல்படுத்தவிருக்கும் செயல்திட்டம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கி பேருந்துகள் புறப்படுவது, வருகை என அனைத்தையும் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கவும், பேருந்துப் பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை செய்வதற்கு வகை செய்யும் திட்டம் குறித்தும் இன்று ஆலோசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையால் புதிதாகக் கொள்முதல் செய்யும் பேருந்துகள் அனைத்தும் இனி குளிர்சாதன மின்சார பேருந்துகளாக இருக்க முதல்வர் விஜய் அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் சாலைகளில் பேருந்துகளுக்கு தனி வழி ஏற்படுத்தும் விதமாக பஸ் ரேபிட் டிரான்சிஸ்ட் சிஸ்டம் திட்டத்தை விரைவுபடுத்தவும் முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்துப் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என்று தவெக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அந்த திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்