கனடா குடியுரிமை பெற்று தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.98 லட்சம் மோசடி…!
திருச்சியை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு
மதுரை மாவட்டம் மேலூர் வாஞ்சிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் ( வயது 44 ). இவர் துபாயில் தொழிலதிபராக உள்ளார். அங்கு பணியாற்றி வந்த திருச்சி துறையூர் மருவத்தூர் பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், ஸ்ரீரங்கம் வ.உ.சி.தெரு பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்கிற சிவரஞ்சன், திருச்சி காட்டூர் விக்னேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் உதவியுடன் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று தருவதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கலைவாணனிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் முதலில் தனது மனைவி வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் அனுப்பி வைத்தார். பின்னர் நேரடியாக ரூ.2 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது .அதன் பின்னர் மீண்டும் ரூ .92 லட்சத்தை பல்வேறு தவணைகளாக கொடுத்துள்ளார். ஆனால், அவருக்கு கனடா குடியுரிமை பெற்று தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலைவாணன்
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமி, பாலாஜி என்கிற சிவரஞ்சன், செல்வகுமார் ஆகிய மூன்று பேர் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.