Rock Fort Times
Online News

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்து தலை மறைவு: அதிமுக நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை…!

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பிரகாஷுக்கு, விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்திருந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  இந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது. எனவே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார்.  கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான எம் .ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வரும் நிலையில் அண்மையில் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.  இந்நிலையில் இன்று(11-07-2024)  காலை சிபிசிஐடி போலீசார், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளரும், உறவினருமான அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஈரோடு மண்டல செயலாளர் கவின்ராஜ் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது அங்கிருந்த கவின்ராஜிடம் விஜயபாஸ்கர் எங்கு இருக்கிறார், அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் யாரேனும் உங்களுக்கு தெரியுமா என விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அணியின் துணைத் தலைவர் பசுவை செந்தில் மற்றும் நில புரோக்கர் ஆட்டையாம்பரத்தைச் சேர்ந்த சேகர் ஆகியோரை சிபிசிஐடி போலீசார், காந்தி கிராமத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  வியாழக்கிழமை அதிமுக நிர்வாகி தமிழரசன், முருகேசன் உள்ளிட்ட மூன்று பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அமைச்சரவை மாற்றமா? முதல்வர் மு.க .ஸ்டாலின் பதில்...

1 of 842

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்