பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.2 கோடியே 29 லட்சம் சுருட்டிய தந்தை-மகன் கைது…!
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் ஓடக்கரை தெருவைச் சேர்ந்தவர் லிங்கராஜ் (42). இவர், ஏரல் மெயின் பஜார் பகுதியில் சாமி அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு எட்டயபுரம் புங்கவர்நத்தம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (63) என்பவர் அறிமுகமாகி, தான் ஒரு சாமியார் என்றும், தான் அருள் வாக்கு கூறுவதால் புங்கவர்நத்தத்தில் புதிய கோயில் ஒன்றை நிறுவி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அக்கோயிலில் விஷேச பூஜை செய்து பலரின் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளதாகவும், பல பேருக்கு பணத்தை இரட்டிப்பு செய்து கொடுத்ததுள்ளதாகவும் ஆசை வார்த்தைகளை கூறியதோடு, தனது மனைவி பாண்டியம்மாள் (57) மற்றும் மகன் அய்யாதுரை (27) ஆகியோரையும் லிங்கராஜிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். மேலும், அவர்கள் லிங்கராஜுக்கும் பூஜை செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்தால் தொழில் பெரிய அளவில் நடைபெறும் என்றும் கூறியுள்ளனர். அதை நம்பிய லிங்கராஜ் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளாக ரூ.38 லட்சம் வரை பாலசுப்பிரமணியிடம் கொடுத்துள்ளார். மேலும், லிங்கராஜின் நண்பரான ஆனந்தகுமார் என்பவரும் ரூ.29 லட்சத்தை பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார். ஆனால், பாலசுப்பிர மணியன் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக விசாரிக்க அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.
அவர்கள் இதேபோல சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரிடம் ரூ.27 லட்சமும், மாரிமுத்து என்பவரிடம் ரூ.10 லட்சமும், இருளப்பன் என்பவரிடம் ரூ.7 லட்சமும், எட்டயபுரத்தைச் சேர்ந்த மாரிகண்ணு என்பவரிடம் ரூ.5 லட்சமும், சாந்தி என்பவரிடம் ரூ.17 லட்சமும், திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் ரூ.10 லட்சத்து 60 ஆயிரமும், கமலக்கண்ணனிடம் ரூ.16 லட்சமும், மாரியம்மாளிடம் ரூ.29 லட்சத்து 40 ஆயிரமும், திருமலைச்சாமி என்பவரிடம் ரூ.40 லட்சம் என மொத்தமாக ரூ.2 கோடியே 29 லட்சம் பணத்தை ஆசை வார்த்தை கூறி சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லெட்சுமி பிரபா தலைமையில் சார்பு ஆய்வாளர் நிவேதா, சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன் ஜோதி மற்றும் தலைமைக் காவலர் வேல்ராஜ் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், தலைமறைவாக இருந்த பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் அய்யாதுரை ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Comments are closed.