Rock Fort Times
Online News

கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசு தின நாளில் திருச்சியில் டிராக்டர் ஊர்வலம் நடத்திய விவசாயிகள் தடுத்து நிறுத்தம்…! ( வீடியோ இணைப்பு)

விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு நியாயமான விலை தர வேண்டும், நெல்லுக்கு இரண்டு மடங்கு லாபம் தர வேண்டும், விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி விவசாயிகள் பல்வேறு கட்டங்களாக போராடி வருகிறார்கள். ஆனால், மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. ஆகவே மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு குடியரசு தினமான இன்றைய தினம்(26-01-2025) விவசாயிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் டிராக்டர் ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி டிராக்டர் பேரணி நடைபெறும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார். அறிவித்தபடி, இன்று திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பைபாஸிலிருந்து 19 டிராக்டர்கள் மற்றும் நான்கு ஜேசிபி இயந்திரங்களுடன் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா பகுதியில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் ஊர்வலத்தை கைவிட்டனர். விவசாயிகளின் டிராக்டர் ஊர்வலம் காரணமாக திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்