டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக போராடிய 11 ஆயிரம் பேர் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இதனால் இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படுகிறது, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சந்கீதா சட்டம் 2023 ன் கீழ் 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் இன்று (26-01-2025) திரும்பப் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது மக்கள் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Comments are closed.