Rock Fort Times
Online News

புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் ஜகபர்அலி கொலை: பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அதிமுக நிர்வாகியுமான ஜகபர்அலி, திருமயம் தாலுகாவில் உள்ள கல்குவாரிகளில் நடைபெற்று வரும் கனிம வள கொள்ளை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதனை தெரிந்து கொண்ட கனிம வள கொள்ளையர்கள் அவரை வாகனத்தை ஏற்றி விபத்து ஏற்படுவது போல படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஜகபர்அலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரது உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஆர்.ஆர். நிறுவனங்களின் உரிமையாளர்களான ராசு, அவரது மகன் சதீஷ், ராமையா, டிப்பர் லாரி வைத்துள்ள ராசுவின் நண்பர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் காசி ஆகிய 5 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராமையாவை தவிர மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜகபர்அலி கொலை வழக்கை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றக்கோரி அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன்படி, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ராமையா, நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அதே சமயம் ஜகபர்அலி கொலை வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் புவனேஸ்வரி நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த வழக்கு தொடர்பாக கடந்த 24.01.2025 முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜகபர்அலி கொலை வழக்கில் மெத்தனமாகச் செயல்பட்டதாக திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகர் மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்