கள்ளக்காதலால் சீரழிந்தது குடும்பம்: பெற்ற குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த கல்நெஞ்சம் படைத்த தாய் கைது…!
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முனியனும், மண்டையூர் அருகே உள்ள பிடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலோத்தம்மாவும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தர்ஷிகா என்ற இரண்டு வயது பெண் குழந்தை, மாதவன் என்ற 10 மாத ஆண் குழந்தை என இரண்டு குழந்தைகள். இந்நிலையில் திலோத்தம்மா விற்கும், வேறொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் , கணவன்- மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பிடாம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்த திலோத்தம்மா இரண்டு குழந்தைகளுடன் அங்கே தங்கி இருந்தார். மகளை சமாதானப்படுத்திய தாய், கணவர் வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால், அங்கிருந்து வெளியேறிய திலோத்தம்மா திருச்சியில் தங்கியிருந்தார். இந்நிலையில், தனது 10 மாத ஆண் குழந்தையை திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்பனை செய்தார். மீண்டும் இரு தினங்கள் கழித்து தனது இரண்டு வயது பெண் குழந்தை தர்ஷிகாவை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது கணவர் முனியன் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் திலோத்தம்மாவை மண்டையூர் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் குழந்தையை கொலை செய்ததையும், மற்றொரு குழந்தையை விற்பனை செய்ததையும் ஒப்புக் கொண்டார். இதனைத்தொடர்ந்து கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விற்கப்பட்ட 10 மாத பச்சிளம் குழந்தையையும் மீட்டு காரைக்குடியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காகவும், விற்பனை செய்த குற்றத்திற்காகவும் தாய் திலோத்தம்மா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மண்டையூர் போலீசார் அவரை கைது செய்தனர். பெற்ற குழந்தை என்றும் பாராமல் கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.