திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள மனமகிழ் மன்றத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போலி மது பறிமுதல்- அதிகாரிகள் அதிரடி…! (வீடியோ இணைப்பு)
திருச்சி- தஞ்சை சாலையில் பழைய பால்பண்ணை அருகே தனியார் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்கள் விளையாட வருகின்றனர். இங்கு வரும் உறுப்பினர்களுக்கு மதுபானம் விற்பனைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய அனுமதி இல்லை. இங்கு, காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற மனமகிழ் மன்றங்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் முழுநேர மதுபான கடைகளாகவே செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் விலையை விட இங்கு கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இங்கு மது வகைகளை பாட்டிலாக விற்பனை செய்யக்கூடாது. “பெக்” அளவில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால், விதிமுறைகளை மீறி பாட்டில், பாட்டிலாக மது விற்பனை செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதற்காக டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து நேரடியாக மானிய விலையில் மது வகைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதர டாஸ்மாக் மதுபான பார் உரிமையாளர்கள் மாதந்தோறும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பணம் செலுத்துவது போல் இவர்கள் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இந்நிலையில் பழைய பால்பண்ணை அருகே செயல்படும் மனமகிழ் மன்றத்தில் போலி மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்று (08-04-2024) அதிகாலை 5 மணி அளவில் இந்த மனமகிழ் மன்றத்தில் மத்திய கலால் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 156 ஃபுல் மது பாட்டில்கள் மற்றும் குவாட்டர் பாட்டில்கள் என லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி பாண்டிச்சேரி மதுபானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், பிரபல மது வகைகளின் பெயர் கொண்ட போலீஸ் ஸ்டிக்கர்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிலம்பு , பிரகாஷ் , சிவா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போலி மது வகைகள் அனைத்தும் பிரபல மது தயாரிப்பு ஆலைகளின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மனமகிழ் மன்ற நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி மதுபான விற்பனை மூலம் மக்கள் உயிரோடு விளையாடும் இது போன்ற மனமகிழ் மன்றங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அதன் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மது பிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.