வேலைவாய்ப்பு, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம்- பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு….!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று (21-03- 2024) தொகுதிக்கு வந்தார். முன்னதாக அவருக்கு திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல் பிளாசா அருகே சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின்குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் மற்றும் மண்டல தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் மேளதாளத்துடன் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அருண் நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கழகத் தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை அறிவித்துள்ளார்.
இது பெரிய பொறுப்பும், வாய்ப்பும் ஆகும். இது மிக முக்கியமான தேர்தலாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து மத்திய அரசு பொறாமை பட்டு நிறைய விஷயங்களை பேசிக் கொண்டு இருக்கிறது. இந்த தேர்தல் மக்களுடைய உரிமையை காப்பதற்காகவும், தமிழகத்திற்கு வரவேண்டிய அனைத்து உரிமைகளும் பெற்று தர வேண்டிய முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது. பெரம்பலூருக்கு ரயில் நிலையம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தலைவர் கடிதம் எழுதி உள்ளார். ரயில் நிலையம் திட்டத்தை செயல்படுத்துவோம். தொகுதியில் சுகாதாரமும், வேலை வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும். திமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் அனைத்தும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.