Rock Fort Times
Online News

கல்வி அமைச்சர் மாவட்டத்திலேயே அவல நிலை: உடைந்த கண்ணாடியை மாற்றாமல் இயக்கப்பட்ட சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி வாகனம்…! ( வீடியோ இணைப்பு )

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.  பள்ளி விஷயத்தில் குறிப்பாக பள்ளி வாகனங்கள் விவகாரத்தில் தமிழக கல்வித்துறை ரொம்ப விழிப்பாகவே இருக்கு. பள்ளி வாகனத்தில் சென்ற ஒரு குழந்தை அந்த வாகனத்தில் உள்ள ஓட்டையின் வழியாக சாலையில் விழுந்து உயிரிழந்ததே இதற்கு முக்கிய காரணமாகும். இதுபோல, பல சம்பவங்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு அதீத அக்கறை செலுத்தி வருகிறது. குறிப்பாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி வாகனங்கள் விஷயத்தில் ரொம்ப கண்டிசனாக இருக்கிறார். ஆகவே தான், பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளி வாகனங்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மேற்பார்வையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பிரேக் சரியாக இருக்கிறதா?, ஜன்னல் கண்ணாடிகள் சரியாக உள்ளனவா?, பள்ளி வாகனங்களில் ஓட்டைகள் எதுவும் இருக்கின்றனவா?, பள்ளி வாகனம் என்ற பெயர் பொறிக்கப்பட்டு உள்ளதா?, பள்ளி வாகனத்துக்கு உரிய வர்ணம் தீட்டப்பட்டு உள்ளதா?, அவசரகால வழி இருக்கிறதா? என்றெல்லாம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு விதிமுறைகள் இல்லாத வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. ஆனால், திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள எஸ்ஆர்வி தனியார் பள்ளி ஒன்றின் வாகனம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சென்றபோது அந்த வாகனத்தின் பின்புற கண்ணாடிகள் உடைந்த நிலையில் அதனை மாற்றாமல் அட்டைப்பெட்டியை வைத்து கயிற்றால் கட்டி சென்றதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்த தனியார் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் நன்றாக இருக்கிறது என்று கூறி பெற்றோர்களை நம்ப வைத்து மாணவர்களை பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.  மாணவர்களை அழைத்து வர 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.  அந்த பள்ளி வாகனங்களின் லட்சணம் இப்படி இருப்பதை அறிந்த பெற்றோர்கள் பலர் அந்த வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தங்களது இரு சக்கர வாகனங்களிலும், ஆட்டோக்களிலும் கொண்டு போய் விட்டு விட்டு வருகின்றனர். அரசாங்க பள்ளி வாகனம் என்றால் கூட பரவாயில்லை. ஒரு தனியார் பள்ளி அதுவும் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வர மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகம் ஒரு கண்ணாடியை மாற்றுவதற்கு கூட பணம் இல்லையா? அல்லது மனம் வரவில்லையா? என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.  இப்படி  அபாயகரமான முறையில் இயக்கப்படும் எஸ் ஆர் வி பள்ளி வாகனங்கள் ஒரு போக்குவரத்து துறை காவலர் கண்ணில் கூட படவில்லையா?, என்பது அடுத்த கேள்வியாக உள்ளது. இதுபோன்று பள்ளி வாகனங்களை இயக்குவ தற்கு அனுமதி கொடுத்தது யார்? அல்லது அனுமதி பெறப்படாமலேயே இயக்கப்படுகிறதா? என்பதும் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. உடைந்த கண்ணாடியை கூட மாற்றாமல் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் செயல்படும் பள்ளி நிர்வாகம், போக்குவரத்து காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

***

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்