முத்துராமலிங்க தேவர் 119 -வது குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இன்று(30-10-2026) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்தவர் தேவர் பெருமகனார். தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் ஏழை, எளிய மக்களுக்காக
கொடுத்தவர். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாட அரசாணை பிறப்பித்தார். அவரது வழிவந்த ஜெயலலிதா சென்னை நந்தனத்தில் தேவர் திருமகனாருக்கு முழு உருவ வெண்கல சிலையை நிறுவி அவருக்கு பெருமை சேர்த்தவர். எனது தலைமையிலான அரசும் தேவர் பெருமகனாருக்கு பெருமை சேர்த்துள்ளோம் என்று தெரிவித்தார்.
அறிக்கை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேவர்ஜெயந்தி மற்றும் குருபூஜை பெருநிகழ்வினை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் புண்ணிய மண்ணில் அமைந்துள்ள தெய்வத் திருமகனாரின் திருக்கோவிலுக்கு சென்று, அதிமுக சார்பில், அம்மா ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 13.5 கிலோ தங்கக் கவசத்தால் தரிக்கப்பட்ட அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினேன். அவரது உயரிய சிந்தனை என்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டட்டும். எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.