விலைவாசியை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை…. தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின்பு அமைச்சர் ரமேஷ் பேட்டி…!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் த.வெ.க.சட்டமன்ற உறுப்பினர்கள் நவல்பட்டு எஸ். விஜி (திருவெறும்பூர்), ஆர். கதிரவன் (மணப்பாறை), எம். விக்னேஷ்( முசிறி), கழக துணை பொதுச் செயலாளர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, அருள் விஜய் மற்றும் கு.ப.கி.சிரஞ்சீவி, திருச்சி கிழக்கு தொகுதி த.வெ.க பொறுப்பாளர் தர்கா எஸ். சௌகத், மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஜெ. சீனிவாசன், த.வெ.க பிரமுகர்கள் ஆர்.கே. ராஜா, ப.செந்தில் நாதன், எனர்ஜி ஐ. அப்துல் ரகுமான், ரா.சி சூர்யா, சிந்தாமணி கௌதமன், மலைக்கோட்டை சதீஷ்குமார், செந்தூர் சீ ஃபூட்ஸ் அருண், பழனி மாணிக்கம், கொட்டபட்டு சீனி, ரோஜர், ராயல் குரூப்ஸ் சேட்டு மற்றும் திருச்சி மாவட்ட, ஒன்றிய, மாநகர, பகுதி, கிளைக்கழக நிர்வாகிகளும், சார்பு அணிகளின் பொறுப்பாளர்களும், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். எல்லா தலைவர்கள் மீதும் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர் முதல்வர் விஜய். இதை வைத்து சிலர் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். ஆனால், தேவர் ஐயாவை பின்பற்றுபவர்கள் அனைவரும் தற்போதைய அரசின் நல்லாட்சியை பாராட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் அவருக்கு நிம்மதி இல்லை. மக்கள் இந்த ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சியாகவும், முதலமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டியும் வருகிறார்கள். மக்கள் பணத்தை சுரண்டியவர்கள் மீது மட்டுமே சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து அரசு எடுக்கும். முந்தைய திமுக ஆட்சியில் உருவான சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளையும், போட்ட விதைகளையும் தான் நாங்கள் தற்போது களையெடுத்து சரிசெய்து வருகிறோம். அதேபோல், விலைவாசியை கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

Comments are closed.