Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு வாசல் கோபுர நுழைவுவாயில் பணிகள் நிறைவு: அமைச்சர் ரமேஷ் திறந்து வைத்தார்…! 

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கிழக்கு வாசல் கோபுர நுழைவுவாயில், சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திறந்து வைத்தார். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் கிழக்கு நுழைவாயிலில் உள்ள தாமோதர கிருஷ்ணன் கோயில் கோபுரத்தின் கொடுங்கை எனப்படும் முன்புற வளைவுப்பகுதி கடந்த 2023-ம் ஆண்டு ஆக.5-ம் தேதி நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. கோபுரத்தை சீரமைப்பதாக கூறி கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து இப்பாதை அடைக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் இக்கோபுரத்தை 2 முறை நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தினார். அதையடுத்து கடந்த 2 மாதங்களாக போர்க்கால அடிப்படையில் பணிகள் துரிதமாக நடைபெற்றன. தற்போது பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், இன்று (ஆக.9) காலை கோபுரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் கோபுர பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். கோபுர திறப்பு விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்