Rock Fort Times
Online News

திருச்சி ஜமால் முகமது கல்லூரி 24-ம் ஆண்டு மகளிர் விளையாட்டு தின விழா…! 

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 24-வது மகளிர் விளையாட்டு தின விழா இன்று (08.08.2026) காலை 9 மணியளவில் கல்லூரி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இர. ஜாஹிர் ஹுசைன் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தெற்கு இரயில்வேயில் பணிபுரியும் சர்வதேச கபடி வீராங்கனை பவித்ரா இந்திரஜித், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி  பேசுகையில், மாணவர்கள் ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தையும், கடுமையான உழைப்பையும் கொண்டு செயல்பட்டால் எத்துறையிலும் முன்னேற்றம் அடையலாம்“. பெண்கள் தங்களுக்கான களத்தை சரியாக தேர்வு செய்து பயணித்தால் வெற்றி வசமாகும் என்று கூறினார். முன்னதாக, தேசிய மாணவர் படை கமாண்டர் ச. காஷிஃபா தலைமையில் கலை மற்றும் அறிவியல் துறை மாணவிகள் பங்கேற்ற 17 அணியினரின் அணிவகுப்பு நடைபெற்றது. மாணவிகளுக்கிடையே நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உட்பட 13 வகையான தடகளப் போட்டிகளும், 8 வகையான குழு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. தனிநபருக்கான வெற்றிக் கோப்பையை இளநிலை விலங்கியல் மூன்றாம் ஆண்டு மாணவி எம். கனிஷ்காவும், ஒட்டுமொத்த வெற்றியாளர்களுக்கான கோப்பையை கணினிப் பயன்பாட்டுத் துறை மாணவிகளும் பெற்றனர்.  தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவிகளின் சிலம்பம், சுருள் சுற்றுதல் ஆகிய தமிழ் பாரம்பரிய கலைகளை நிகழ்த்திக் காட்டினர். கல்லூரியின், செயலர் மற்றும்  தாளாளர் டாக்டர். அ. கா. காஜா நஜீமுதீன்,  பொருளாளர் எம்.ஜே. ஜமால் முகமது, உதவிச் செயலர் கே. அப்துஸ் சமது, நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் மதிப்புறு இயக்குநர் கா. ந. அப்துல் காதர் நிஹால் மற்றும் விடுதி நிர்வாக இயக்குநர் கா. ந. முகமது பாசில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூடுதல் துணை முதல்வர்கள் ஷே. நாகூர்கனி, அ. ஜாபர் அஹமத் மற்றும் துறைத் தலைவர்கள்,  முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உடற்கல்வித் துறை இயக்குநர் பி. எஸ். ஷாயின்ஷா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். நிறைவாக கல்லூரியின் கூடுதல் துணை முதல்வர். ஜ. பாத்திமா பௌஜியா நன்றி கூறினார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்