திமுக அரசு என்னை திட்டமிட்டு கொலை செய்ய முயல்கிறது என குற்றம் சாட்டினார் சாட்டை துரைமுருகன். சாதிய மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியை தர குறைவாக விமர்சித்து பேசியதகாவும் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தனர். ஆனால் சிறையில் அடைக்க முகாந்திரமில்லை எனக்கூறி, நீதிமன்றம் அவரை விடுவித்தது. இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியது : ஆட்சியில் உள்ள திமுக அரசு, என் மீது ஏற்கெனவே தொடர்ச்சியாக 11 வழக்குகளை பதிவு செய்து என்னை முடக்க நினைத்தது. தற்போதும் அதேபோல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எங்கள் தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தோம். கடந்த 14 ஆண்டு காலமாக பட்டியல் இன சமூகத்திற்காக நாம் தமிழர் கட்சி பாடுபடுகிறது. வேங்கை வயல், நாங்குநேரி போன்ற இடங்களில் பட்டியலின சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்துள்ளது. ஆனால் என் மீது, திமுக அரசு சாதி வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளது. நான் பாடிய பாடலை அதிமுக கடந்த 31 ஆண்டு காலமாக பாடி வருகிறது. சமூக வலைதளத்தில் இன்றளவும் அந்த பாடல் உள்ளது. அந்த பாடலை மேற்கோள் காட்டி பாடினேன். தவிர நான் எந்த சமூகத்தையும் இழிவுபடுத்தவில்லை. சண்டாளன் என்பது இழிச்சொல் என எனக்கு தெரியாது.
ஆனால் அந்த சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தி என் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு செல்லாது என நீதிபதி என்னை விடுதலை செய்துள்ளார். என் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ஸ்குவாஷ் செய்வோம். திமுகவுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்பது அப்பட்டமான அடக்குமுறை. வீராணத்தில் தங்கி இருந்த என்னை வம்படியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். எனது செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர் . திமுக அரசு, காரில் பயணித்த என்னை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கி கொலை செய்ய முயன்றது. என் உயிருக்கு பாதுகாப்பில்லை எனவே நீதிமன்றம் என் உயிருக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.
Comments are closed.