திருச்சி உறையூர் கீழ வைக்கோல்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவரது மனைவி அருள்மொழி (45 ). இவர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், திருச்சி காந்திபுரம் அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். என்னுடன், உறையூர் புது பாய்க்காரதெரு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர், கடந்த 2 வருடங்களாக அவரது கணவருடன் சேர்ந்து தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். அதைத் தொடர்ந்து நாங்களும் எங்கள் தெருவை சேர்ந்தவர்களும் அவரிடம் சீட்டு சேர்ந்தோம். மாதம் ரூ.500 வீதம்
12 மாதத்திற்கு ரூ. 6 ஆயிரம் செலுத்தினால் இறுதியில் ரூ.1000 சேர்த்து ரூ.7000 ஆக தருவதாக கூறினார். அதைத்தொடர்ந்து உறையூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்த லீலாவதி 16 பேரிடமும், கிருத்திகா என்பவர் 22 பேரிடமும், சுபா என்பவர் 67 பேரிடமும் , அருள்மொழி என்பவர் 17 பேரிடமும் என ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் வசூலித்து செலுத்தினோம். ஆனால் யாருக்கும் அவர்கள் சீட்டு முதிர்வு தொகை கொடுக்கவில்லை. பின்னர் நாங்கள் கேட்டபோது 3 மாத காலம் அவகாசம் கேட்டார்கள்.
இந்த நிலையில் சீட்டு நடத்திய அந்த பெண் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களுக்கு பணம் தர முடியாது. முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள். நீ வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது உன்னை வாகனத்தை வைத்து இடித்து தள்ளி கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். ஆகவே, சம்பந்தப்பட்ட கணவன்-மனைவி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து எங்கள் சீட்டு தொகையை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Comments are closed.