நெருங்கும் தீபாவளி…திணறும் திருச்சி பஜார்: சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி ஐ.பி.எஸ்.நடவடிக்கை எடுப்பாரா ?
திருச்சியின் வணிக அடையாளங்களில் முக்கியமான பகுதிகளாக இருப்பது என்.எஸ்.பி ரோடு, சின்னக்டைவீதி, பெரிய கடைவீதி, காந்தி மார்க்கெட் மற்றும் இதனை சுற்றியுள்ள ஏரியாக்கள்தான். பெரிய,பெரிய ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், மொத்த விற்பனை செய்யும் மளிகைக்கடைகள் என அனைத்தும் மேற்சொன்ன பகுதிகளை சுற்றியே அமைந்திருக்கிறது. இதனால், திருச்சி மட்டுமின்றி சுற்றியுள்ள பல மாவட்ட மக்களும் இப்பகுதிகளுக்கு தான் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பர்சேஸ் செய்ய வருவார்கள். அப்படி திருச்சிக்கு வரும் மக்கள், பஜாரில் ஏற்படும் நெரிசல்களிலும், இடர்பாடுகளிலும் சிக்கி நொந்து நூடுல்ஸ் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முறையற்ற போக்குவரத்து பணி, சாலையின் இரண்டு பக்கங்களிலும் சகட்டுமேனிக்கு டூ-வீலர் நிறுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகள் ஆகியவைதான் முழுகாரணம். சிங்காரத்தோப்பு பகுதியில் நேற்று ( அக்.05 ) சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான டிராஃபிக் ஜாமாகியுள்ளது. திருச்சி மலைக்கோட்டையை சுற்றியுள்ள வட்டமான பகுதிதான் மெயின் பஜார். இங்குள்ள அனைத்து வீதிகளுமே குறுகலான சாலை உள்ள பகுதிதான். சாலையின் இரண்டு புறங்களிலும் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. பண்டிகை கால மக்கள் கூட்டத்தை கணக்கிட்டு பார்த்தால் இரண்டு பைக்குகள் மட்டுமே ஒரே நேரத்தில் செல்ல முடியும். ஆனால் கார், ஆட்டோ, வேன் என எல்லா வாகனங்களும் இவ்வழியாக செல்ல சர்வசாதாரணமாக அனுமதிக்கப்படுகிறது. கூடவே, மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள சீசன் நேரங்களிலும்கூட, இப்பகுதிகளில் உள்ள வணிக கடைகளுக்கான லோடுகளை ஆட்டோவிலும், சைக்கிள் ரிக்க்ஷாவிலும் கொண்டுவந்து நடுரோட்டில் நிறுத்தி பொறுமையாக ஏற்றி இறக்குகின்றனர். இதனால், இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் இதையெல்லாம் துளிகூட கண்டுகொள்வதே கிடையாது. மக்கள் கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் திருடர்கள் கூட்டம் அப்பாவி மக்களின் நகை, பணம், பொருள் உள்ளிட்டவற்றை திருடிச்செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி ஐ.பி.எஸ். இவ்விவகாரத்தில் அக்கறைசெலுத்தி, காந்தி மார்கெட்டில் துவங்கி பெரிய கடைவீதி, சிங்காரதோப்பு, என்.எஸ்.பி ரோடு, நந்தி கோவில் தெரு, தெப்பக்குளம் பஜார், மெயின்கார்டுகேட், மேல புலிவார்டு ரோடு, மரக்கடை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களை முழுவீச்சில் பணியமர்த்தி போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். மிக முக்கியமாக, இரவு நேரங்களில் மட்டுமே வணிக நிறுவனங்களுக்கான சரக்கு லோடுகளை ஏற்றவும், இறக்க வேண்டும் என கடுமையாக உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பஸ் நிறுவனத்தினரிடமும் கலந்துபேசி தங்குதடையின்றி விரைவான போக்குவரத்துக்கு வழிவகை செய்திடவேண்டும். சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து சரி செய்யும் பணிகளிலும் கூடுதல் காவலர்களை நியமிக்கவேண்டும் என்கிற கோரிக்கை சமூக ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருகிறது.
Comments are closed.