Rock Fort Times
Online News

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் விஜய் சந்திப்பது விசாரணையை பாதிக்கும் செயல்… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுக..!

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது கரூரில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதற்கான வழக்கை சிபிஐ நடத்தி வருகிறது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் விஜய் தலைமையிலான த. வெ.க அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில் வருகிற ஜூலை 10ம் தேதி முதல்வர் விஜய் கரூர் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது 41 பேரின் உறவினர்களுக்கும் அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, சிபிஐ விசாரணையை பாதிக்கும் என்று திமுக கருதுகிறது.

இதுதொடர்பாக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று( 03-07-2026) அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், “கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 142 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தொடர்ந்து வழக்கின் தன்மையை மாற்றும் வகையில் அவதூறான கருத்துகளை பேசி வருகிறார். இது சாட்சிகளை மறைமுகமாக அச்சுறுத்தும் செயல். வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, அரசின் சார்பில் நிதியுதவி மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரின் இந்த செயல் சிபிஐ-யின் நடுநிலையான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அமைந்துவிடும். இது மட்டுமல்லாமல், “வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும். சாட்சிகள் சுதந்திரமாக வாக்குமூலம் அளிப்பதை உறுதி செய்ய நீதிமன்றம் உரிய பாதுகாப்பு உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த சில தினங்களில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்