காவல்துறை என்பது மக்களுக்குப் பொறுப்பான அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர, அவர்கள் அமைச்சர்களின் ஊழியர்கள் அல்ல” என மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) அமைப்பின் மஹாராஷ்டிரா மாநில பொதுச் செயலாளரான சயீத் அகமது அப்துல் வாஹித் சௌத்ரி என்பவர், மத்திய மற்றும் மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த 5 – முதல் தகவல் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அவரை மும்பை மாவட்டத்திற்குள் நுழையக் கூடாது என ஓராண்டு காலத்திற்கு காவல்துறை உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை எதிர்த்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, காவல்துறையின் நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்து, அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது. மேலும், நீதிமன்றம் தனது தீர்ப்பில், அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதும், விமர்சிப்பதும் ஒரு குடிமகனின் ஜனநாயக உரிமை. அதற்காக ஒருவரை ஊருக்குள் வரக்கூடாது எனத் தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. காவல்துறை சட்டத்தின்படி செயல்பட வேண்டும். அவர்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்குத் தான் பொறுப்பானவர்களே தவிர, ஆளுங்கட்சியினரின் அல்லது அமைச்சர்களின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றும் ஊழியர்களாகச் செயல்படக் கூடாது. பழைய எஃப் ஐ ஆர்களைக் காரணம் காட்டி, அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி இப்படிப்பட்ட தீவிரமான உத்தரவுகளைப் பிறப்பிப்பது அதிகார துஷ்பிரயோகம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளது. அரசியல் ரீதியாகப் போராடுபவர்களைக் குறிவைத்து எடுக்கப்படும் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போடும் வகையில் மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

Comments are closed.