இஸ்ரோ ஏவுதள விவகாரத்தில் சீன கொடியுடன் திமுக அமைச்சர் விளம்பரம் செய்ததை கிண்டலடிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது தமிழக பாஜக.
பிரதமர் மோடி சில தினங்கள் முன் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் தமிழக அரசு பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். அதேநேரம் தூத்துக்குடியின் பொறுப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை. எனினும், குலசேகரப்பட்டினம் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமர் மோடி உள்ளிட்டோரை வரவேற்கும் விதமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெயரில் அன்று தமிழக நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகின. அந்த விளம்பரத்தின் பின்னணியில் உள்ள ராக்கெட்டில் இந்திய கொடிக்கு பதிலாக சீனாவின் கொடி இடம்பெற்றது. இதனை குறிப்பிட்டு பாஜக திமுகவை ட்ரோல் செய்துவருகின்றது. இந்நிலையில்தான், இன்று 71-வது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மக்களின் மொழியான மாண்டரின் மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தமிழக பாஜக கிண்டல் செய்துள்ளது. தமிழக பாஜகவின் அந்த பிறந்தநாள் வாழ்த்து பதிவில், “மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவருக்குப் பிடித்தமான மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!. அவர் நீண்ட ஆயுளுடன் வாழட்டும்!” என்று பதிவிட்டு முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துக்கு பின்னணியாக சீனாவின் கொடி, டிராகன் போன்றவற்றை பதிவிட்டு கிண்டல் செய்துள்ளது. இப்பதிவு தற்போது கவனம் பெற்றுவருகிறது
Comments are closed, but trackbacks and pingbacks are open.