இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று(15-08-2026) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இன்று நாம் அனைவரும் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இன்று ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கம் ஒவ்வொரு இதயத்திலும் எதிரொலிக்கிறது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி பறக்கிறது, ஒவ்வொரு மனதிலும் அது நிறைந்திருக்கிறது; புதிய தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு, தேசம் மிகுந்த உற்சாகத்துடனும் துடிப்புடனும் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தொழில் உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் செல்போன் உற்பத்தி 35 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை 100 மடங்கு அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் இந்தியா பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3 செமிகண்டக்டர் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments are closed.