Rock Fort Times
Online News

பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் சிக்கிய துணை தாசில்தார் மருத்துவமனையில் இருந்து ஓட்டம்…!

பெரம்பலூர் புது பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வெங்கடாஜலபதி நகரில் கட்டப்பட்ட திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று வழங்க அதன் மேலாளர் துரைராஜிடம், துணை தாசில்தார் பழனியப்பன் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விருப்பமில்லாத துரைராஜ், இது குறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி துரைராஜ், ரூ.20 ஆயிரம் பணத்தை பழனியப்பனிடம் கொடுத்தார். அந்த பணத்தை, வாங்கி வைக்குமாறு அங்கிருந்த கீழக்கரை வி.ஏ.ஓ., நல்லுசாமியை பழனியப்பன் அறிவுறுத்தினார். இதனையடுத்து நல்லுசாமி பணத்தை வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது துணை தாசில்தார் பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் மருத்துவமனையில் சேர்க்குமாறும் கேட்டுக் கொண்டதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விஏஓ நல்லுசாமியை மட்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனியப்பன் இன்று (02-07-2024) அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் பழனியப்பனை தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்