புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ஆம்பூர் பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜயா (32). சம்பவ தினத்தன்று விஜயா மற்றும் அவரது நாத்தனார் செல்வி ஆகிய இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஆண் ஒருவர், உங்களது வீட்டில் குடிப்பழக்கத்திற்கு யாராவது ஆளாகி இருக்கிறார்களா? அப்படி இருந்தால் குடிப்பழக்கத்தை நிறுத்த பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என கூறியுள்ளார். இதனை நம்பிய விஜயா, தனது கணவர் தினமும் மது குடித்து வருகிறார், அதை நிறுத்துவதற்கு பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், பரிகாரம் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் செலவாகும் என்று கூறியுள்ளார். அதற்கு விஜயா தன்னிடம் ரூ. 3 ஆயிரத்து500 தான் இருக்கிறது என தெரிவித்தார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்த நபர், வீட்டின் முகப்பு பகுதியில் அமர்ந்து கொண்டு பரிகாரம் செய்வதற்கு சில பொருட்களை கேட்டுள்ளார்.
அந்தப் பொருட்களை வாங்க செல்வி கடைக்கு சென்று இருந்தார். அந்த நேரத்தில், பரிகாரம் செய்வதற்கு கழுத்தில் அணிந்திருக்கும் தாலி மற்றும் தோடு, மூக்குத்தி, மோதிரத்தை கழற்றி வையுங்கள், அதை வைத்து பரிகாரம் செய்தால் தான் உங்களது கணவரது குடிப்பழக்கத்தை நிறுத்த முடியும் என்று கூறியவுடன் விஜயா தான் அணிந்திருந்த தாலி, தோடு, மூக்குத்தி வீட்டிலிருந்த மோதிரம் உட்பட 3 பவுன் தங்க நகைகளை கழற்றி வைத்துள்ளார். அப்போது பரிகாரம் செய்தவுடன் அந்த மர்ம நபர் விஜயாவின் முகத்தில் விபூதி போன்ற ஒரு பவுடரை தூவியுள்ளார். உடனே விஜயா சுயநினைவை இழந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் 3 பவுன் நகைகள், ரூ 3 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற செல்வி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது விஜயா பிரம்மை பிடித்தவர் போல் அமர்ந்திருந்தார். கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் தோடு மூக்குத்தி எங்கே என்று விஜயாவிடம் கேட்டதற்கு பரிகாரம் செய்தவர் கழற்றி வைக்க சொன்னார். அதனால் கழற்றி வைத்தேன், பரிகாரம் முடிந்தவுடன் பார்த்தால் அவரை காணவில்லை என்றார். இதுகுறித்து மாத்தூர் போலீசில் விஜயா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
**

Comments are closed.