தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) கீழ், இடைக்கால மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் குடும்பத் தொகை பெறுவோருக்கான அகவிலைப்படி நிவாரணத்தை 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை நிதித்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) கடந்த 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், இத்திட்டத்திற்கான விரிவான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை 2026 ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால மாதாந்திரத் தொகை வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் ரூ. 10,000, இவற்றில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதனுடன் 60 சதவீத அகவிலைப்படி நிவாரணமும் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், 2026 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உயிரிழந்தால், அவருக்குக் கிடைக்க வேண்டிய இடைக்கால மாதாந்திரத் தொகையில் 60 சதவீதம் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு குடும்பத் தொகையாக வழங்கப்படுகிறது. பணியில் இருக்கும்போதே உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் இடைக்கால குடும்பத் தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணமும் 63 சதவீதமாக உயர்த்தப்பட்டது.


Comments are closed.