திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் மெயின் ரோடு வியாசராச வீதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 73). இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். ஜோதிடரான இவரது மகன் அதிகாலையில் எழுந்து அடிக்கடி கோவை சென்று விடுவார். அந்த நேரங்களில் சரஸ்வதி மட்டும் தனியாக வீட்டில் இருப்பார். இதை நோட்டமிட்ட முகமூடி கொள்ளையன் ஒருவன் இன்று(27-05-2024) காலை 6 மணி அளவில் சரஸ்வதி வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த மூதாட்டியின் வாயை பொத்தி மிரட்டி அவர் அணிந்திருந்த 8 பவுன் செயின் மற்றும் 2 பவுன் வளையல் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்த தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரஸ்வதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ஒரு கொள்ளையன் வீட்டுக்குள் நுழைந்து தன்னை மிரட்டி தான் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை பறித்து சென்றதாகவும், அந்த கொள்ளையன் முகமூடி அணிந்திருந்ததாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும் போது, சமீபகாலமாக ஸ்ரீரங்கம் பகுதியில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மங்கம்மா நகர் மெயின் ரோடு மற்றும் அம்மா மண்டபம் பகுதியில் 24 மணி நேரமும் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என்றனர்.
Comments are closed.