கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அதர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பரமசெல்வம். இவர், கடலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பொருளாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு சொந்தமான இடத்தில் செட் அமைத்து கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்டு வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பெயரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனுடன், அச்சடிக்கும் இயந்திரம், பணம் எண்ணும் இயந்திரம், வாக்கி – டாக்கி மற்றும் ஏர்கன் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கள்ள நோட்டு விவகாரத்தில் சிக்கிய விசிக மேற்கு மாவட்ட பொருளாளர் பரமசிவம் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.
Comments are closed.