18 மாதங்களாக வாடகை செலுத்தாததால் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் 20 கடைகளை இழுத்து மூடிய மாநகராட்சி அதிகாரிகள்…!
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து அரியலூர், பெரம்பலூர், கடலூர், துறையூர் போன்ற இடங்களுக்கும், முக்கொம்பு, சமயபுரம், மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் போன்ற பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ் நிலையத்தில் திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை நடத்திய சிலர் கடந்த 18 மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. அந்தவகையில் சுமார் ரூ.1 கோடியே 62 லட்சம் வாடகை பாக்கி உள்ளது. வாடகை தொகையை செலுத்தகோரி அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் வாடகை தொகை செலுத்தப்படவில்லை. இந்நிலையில் வாடகை செலுத்தாத கடைகளை மூடவும், பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி இன்று(15-06-2024) மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை பொறியாளர்கள் மதன்குமார், ராஜேந்திரன், கணேஷ்பாபு மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட வருவாய் உதவி ஆய்வாளர் குமரேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாடகை பாக்கி செலுத்தாத 20 கடைகளை அதிகாரிகள் பூட்டினர். மேலும், பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிராமப்புகளையும் அகற்றினர். அப்போது கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சத்திரம் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
*
Comments are closed.