தொகுதி மறுசீரமைப்பு சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக நம்மை மாற்றிவிடும்- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 முதல் 12 தொகுதிகள் வரை குறைய வாய்ப்பு இருப்பதாகவும், இதேபோல பிற மாநிலங்களும் பாதிக்கப்பட கூடும் என்பது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாதம். ஆகவே , தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக பிற மாநில முதல்- அமைச்சர்களை அழைத்து சென்னையில் ஒன்றாக கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிற மாநில முதல்- அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னையில் இன்று( மார்ச் 22) காலை தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்பே மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான இந்த கூட்டம். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாடு போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும். மக்கள் தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்க நேரிடும். மாநிலங்களில் தொகுதிகள் குறைந்தால் நிதி பெறுவதிலும் சிரமம் ஏற்படும். தமிழ்நாடு 8 முதல் 12 தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது. இது வெறும் எண்ணிக்கை பற்றியதல்ல, நம் அதிகாரம் பற்றியது. இந்த தொகுதி மறுசீரமைப்பு சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக நம்மை மாற்றிவிடும். கூட்டாட்சித் தன்மைக்கு ஆபத்து வந்துள்ளதை உணர்ந்து அனைவரும் கூடியுள்ளோம். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை. எந்த சூழ்நிலையிலும் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது” என்று பேசினார். தொடர்ந்து பிற மாநில முதல்- அமைச்சர்களும் பேசி வருகின்றனர். இந்த கூட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தொகுத்து வழங்கி வருகிறார்.
Comments are closed.