Rock Fort Times
Online News

அறநிலையத் துறைக்கு அவமானத்தை ஏற்படுத்தும் சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையரை கண்டித்து கடை அடைப்பு..!

போலீசார் குவிப்பு (படங்கள்)

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும்.
இக்கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ளூர் கிராம மக்கள் இலவச தரிசனம் செய்து வந்தனர். ஆனால், ச.கண்ணனூர் பேரூராட்சி பொதுமக்களை தரிசனம் செய்ய கோவில் இணை ஆணையர் கல்யாணி சமீப காலமாக மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இணை ஆணையர் கல்யாணியை சந்தித்து பேசியும் செவி சாய்க்கவில்லை. இதனால், வேதனை அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அம்மனை தரிசிக்க எங்களை அனுமதிக்காவிட்டால் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்திருந்தனர். அப்பொழுதும் இணை ஆணையர் கல்யாணி அவர்களை சமாதானப்படுத்த முன் வரவில்லை. இதனால், கல்யாணிக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இன்று(8-10-2023) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கடைகளின் முன்பாக கருப்பு கொடிகளை ஏற்றி தங்களது எதிர்ப்பை காட்டினர். மேலும், சமயபுரம் நால்ரோடு பகுதியில் இருந்து சன்னதி வீதி வரை அமைதி பேரணி நடத்த முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களில் முக்கியமானவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர். அதன்பேரில், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் வியாபார சங்க முக்கியஸ்தர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அங்குள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. அவர்களிடம் லால்குடி ஆர்.டி.ஓ சிவசுப்பிரமணியன், தாசில்தார் அருள்ஜோதி, சமயபுரம் மாரியம்மன்  கோவில் இணை ஆணையர் கல்யாணி , ஏ.டி.எஸ்.பி. கோடிலிங்கம் லால்குடி டி.எஸ்.பி.அஜய் தங்கம் , சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன், சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தால் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் தேங்காய், பழம் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் வியாபாரிகள் சிலர் கூறுகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசும், அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சராக உள்ள சேகர் பாபுவும் பல்வேறு கோவில் திருப்பணிகளை திறம்பட மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றனர். இது, பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி பொறுப்பேற்றதிலிருந்து எங்கள் கிராம மக்களை அம்மனை தரிசனம் செய்ய விடாமல் தொடர்ந்து தடுத்து வருகிறார். அம்மனை தரிசிக்க விடாமல், தடுப்பதற்கு இவர் யார்?, இவருக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?. இவர் என்ன இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரா? . கோவிலுக்குள் எங்களை வர விடாமல் தடுப்பது ஏன் என்று தெரியவில்லை. இவரது செயல்பாடுகள் இன்று சமய அறநிலையத்துறைக்கு கரும் புள்ளியாகும். இதற்கு முன்பு பணியாற்றிய எந்த இணை ஆணையரும் இதுபோன்று நடந்து கொண்டதில்லை. அவரிடம் ஆர்டிஓ மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவது வெட்கக்கேடான செயல். ஊர் மக்களை மதிக்காமல், வியாபாரிகளை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் இவரை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்புவது தான் சிறந்ததாகும். தனது சர்வாதிகார போக்கை திருத்திக் கொள்வார் என்று எவ்வளவோ முறை காத்திருந்தோம். ஆனால், அவர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் செயல்பட்டு வருகிறார். இதனை கண்டித்து முதல் கட்டமாக இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்தி உள்ளோம். இவரை மாற்றாவிட்டால் அடுத்த கட்டமாக பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று ஆதங்கத்துடன் கூறினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்