திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் கிராமத்தில் திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த ஒரு டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. மேற்படி சொத்துக்களை புங்கனூரை சேர்ந்த நபர்கள் குத்தகை செய்து வந்த நிலையில், மணிகண்டம் யூனியன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க.வை சேர்ந்த வருமான தாமோதரனும், அவரது உறவினர் செந்தில்குமாரும் சேர்ந்து சுமார் 2 ஏக்கர் நிலத்தினை அபகரித்து பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய தீர்மானித்து புங்கனூர் பஞ்சாயத்து ஆபீஸில் வேலை செய்த ராஜேந்திரன் என்பவரை சொத்தின் உரிமையாளர் மகன் போல சித்தரித்து அவரது பெயரை வெங்கடாசலம் என மாற்றம் செய்து அந்த பெயரில் போலி ஆதார் கார்டு மற்றும் சொத்தின் உரிமையாளர் இறந்தது போல போலி இறப்பு சான்றிதழ், போலி வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவைகளை தயார் செய்து திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சொத்தின் ட்ரஸ்ட்டிகளில் ஒருவரான ரமா கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு (ரூரல்) காவல் துணை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், பஞ்சாயத்து தலைவர் துணையோடு போலி ஆவணத்தை தயார் செய்து நிலத்தை அபகரித்தது தெரிய வந்தது. அதன்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு ராஜேந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரனை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.