இந்திய நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம்( ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும், பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை அடைந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார். இதற்கான பொதுக்கூட்ட மேடை திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு நாளை மாலை 5 மணிக்கு நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான முக ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றுகிறார். இதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். முன்னதாக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் நாளை மாலை 4.45 மணிக்கு திருச்சிக்கு வருகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். பின்பு அவர் காரில் சிறுகனூருக்கு செல்கிறார். பிரசார பொதுக்கூட்டம் முடிந்ததும் கார் மூலமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் தஞ்சை, நாகை தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரசாரம் செய்கிறார். தொடர்ச்சியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர்,வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, மதுரை, சிவகங்கை,தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருவள்ளூர், வடசென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 25, 26, 27,29, 30,31,ஏப்ரல் 2, 3, 5, 7,6,9, 10, 12, 13 ,15 ,16 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார். இறுதியாக அடுத்த மாதம் 17-ந்தேதி தென்சென்னையில் மத்திய சென்னை வேட்பாளரை ஆதரித்து இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மொத்தம் 20 நாட்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.