Rock Fort Times
Online News

வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிப்பு ரத்து…!

சிறப்பு நீதிமன்றத்தில் ஜூலை மாதத்திற்குள் வழக்கு விசாரணை நடத்தி முடிக்க உத்தரவு

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடர்ப்பட்ட வழக்கில் அவரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சி காலத்தில் 2006 முதல் 2011ம் ஆண்டு வரை வீட்டு வசதிவாரியத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஐ. பெரியசாமி. இவர், வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை எம்எல்ஏ, எம்பிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார். இதற்கு அமைச்சர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிந்த நிலையில் இன்று(26-02-2024) நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தீர்ப்பு அளித்தார். அதில் வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கிய குற்றச்சாட்டில் அமைச்சர் ஐ. பெரிய சாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார். மேலும், வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட அவர், வழக்கு விசாரணையை ஜூலைக்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அறிவுறுத்தினார். மேலும், மார்ச் 28ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை தொகை செலுத்த அமைச்சருக்கு உத்தரவிட்டார்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்