மனு கொடுக்க வந்தவர் மீது கொலை வெறி தாக்குதல்: துணை சபாநாயகர் மீது நடவடிக்கை கோரி திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நவ. 18-ம் தேதி ஆர்ப்பாட்டம்…!
திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவிசங்கர். இவருக்கு துணை சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் இவர் தன்னை சந்தித்து மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
ஒருவரை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் விஜயும், ரவிசங்கரை சென்னைக்கு வரவழைத்து கண்டித்தார்.
ஆனால், அவர் மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக வெற்றிக்கழக தலைமையை கண்டித்தும், துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திருச்சி புறநகர், வடக்கு மாவட்டம் சார்பில் வருகிற 18-ம் தேதி (புதன்கிழமை)
ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீண்ட மரபும், மாண்பும் பொருந்தி இருக்கின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கரை சந்தித்து குறைகளை தெரிவிப்பதற்காகச் சென்ற சமூக செயல்பாட்டாளர் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், அதிகார மமதையில் தவறிழைத்தவர் மீது, கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் வருகிற 18-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.