அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை… * 16- ம் தேதிக்குள் இருப்பை குறைக்க வணிகர்களுக்கு அரசு உத்தரவு..!
தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைத்து செயற்கையாக விலையை உயர்த்துவதைத் தடுக்கும் வகையில், வணிகர்கள் இருப்பு வைத்திருக்க வேண்டிய அளவுக்கு தமிழக அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பு வைத்துள்ள வணிகர்கள் நவம்பர் 16-ந் தேதிக்குள் அதைக் குறைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (நவம்பர் 14) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 1955-ம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி, நெல் மற்றும் சர்க்கரை ஆகியவற்றுக்கு இருப்பு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு நவம்பர் 13-ந் தேதி அரசிதழ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு வணிகர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் பொறுத்தவரை மொத்த வணிகர்கள் தலா 200 மெட்ரிக் டன் வரை இருப்பு வைத்திருக்கலாம். சில்லறை வணிகர்கள் ஒவ்வொரு பருப்பு வகையிலும் தலா 5 மெட்ரிக் டன் வரை மட்டுமே இருப்பு வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அரிசி மற்றும் நெல்லைப் பொறுத்தவரை மொத்த வணிகர்களுக்கு 2,000 மெட்ரிக் டன் வரையும், சில்லறை வணிகர்களுக்கு 8 மெட்ரிக் டன் வரையும் இருப்பு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரிய தொடர் சில்லறை விற்பனை நிறுவனங்கள் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை ஒவ்வொரு விற்பனை நிலையத்திலும் தலா 5 மெட்ரிக் டன் வரையும், ஒவ்வொரு கிடங்கிலும் தலா 200 மெட்ரிக் டன் வரையும் இருப்பு வைத்திருக்கலாம். ஆலை உரிமையாளர்கள் கடந்த 3 மாதங்களின் சராசரி பதனிடும் அளவு அல்லது ஆண்டுத் திறனில் 25 சதவீதம் ஆகியவற்றில் எது அதிகமோ அந்த அளவு வரை பருப்பு வகைகளை இருப்பு வைத்திருக்கலாம். இறக்குமதியாளர்கள் சரக்கு வந்து சேர்ந்த நாளிலிருந்து 45 நாட்களுக்கு மேல் இருப்பு வைத்திருக்கக் கூடாது.
சர்க்கரையைப் பொறுத்தவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டின்படி, மொத்த வணிகர்கள் 1,000 குவிண்டால் வரை இருப்பு வைத்திருக்கலாம். பெரிய தொடர் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கும் தனியாக இருப்பு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 16-ந் தேதிக்குள் இருப்பைக் குறைக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள வரம்பை மீறி துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி மற்றும் நெல் ஆகியவற்றை இருப்பு வைத்துள்ள வணிகர்கள் நவம்பர் 16-ந் தேதிக்குள் கூடுதல் இருப்பைக் குறைக்க வேண்டும். மேலும், மொத்த வணிகர்கள், சில்லறை வணிகர்கள், பெரிய தொடர் சில்லறை விற்பனை நிறுவனங்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் பதனிடுவோர் தங்களிடம் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்களை அரசின் இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும். அரிசி மற்றும் நெல் இருப்பு விவரங்களை foodstock.dfpd.gov.in இணையதளத்திலும், பருப்பு வகைகளின் இருப்பு விவரங்களை fcainfoweb.nic.in இணையதளத்திலும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்க்கரை இருப்பு விவரங்களையும் அரசின் விதிமுறைகளின்படி தெரிவிக்க வேண்டும்.
பதுக்கினால் கடும் நடவடிக்கை :
அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைப்பது, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக மாவட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தக் குழுக்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்டு இருப்பு விவரங்களைச் சரிபார்க்கும்.
அரசு நிர்ணயித்துள்ள வரம்பை மீறி அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Comments are closed.