Rock Fort Times
Online News

காவிரி விவகாரத்தில் இனியும் மௌனம் கூடாது; அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்… * முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது;

மேகதாட்டு அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையிலேயே கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியிருக்கிறார். காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் பேசி வரும் நிலையில், நமது விவசாயிகளைக் காப்பதற்காகத் தமிழ்நாட்டின் கட்சிகளும் நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவது அவசியம். ஆகவே உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். கர்நாடக முதல்வர் மேகதாட்டு அணை கட்டுவது குறித்து மீண்டும் தீவிரமாகப் பேசத் தொடங்கி இருக்கும் சூழ்நிலையில், இனியும் தமிழ்நாடு அரசு மௌனம் காக்கக் கூடாது. எனவே, நமது ஒற்றுமையையும் கர்நாடக முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று இக்கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும், மேகதாது அணைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜூன் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அரசின் தனித் தீர்மானத்தையும், தமிழ்நாட்டில் உள்ள சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். காவிரி உரிமையை பொறுத்தவரையில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும், கட்சி வேறுபாடுகளையும் கடந்து நாம் ஒற்றுமையாக நிற்பது அவசியம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்