பாஜக தலைமையில் மக்களவை தேர்தலை தமிழ் மாநில காங்கிரஸ் சந்திக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், “நேற்று மாலை பாஜக தமிழக பொறுப்பாளர் அர்விந்த்மேனன், தமாகா அலுவலகத்தில் என்னை சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் தமிழக அரசியல் சூழல், மக்களவை தேர்தல் குறித்து பேசினோம். அப்போது, நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். பாஜக மேலிட தலைவர்களும் என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். ஆகவே, பல்லடத்தில் நாளை(27-02-2024) நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து பாஜக தலைமையில் மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளது. பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக கொண்ட பாஜகவில் அங்கம் வகிப்பதாக தமாகா முடிவெடுத்துள்ளது. மூப்பனார் காலத்தில் தொடங்கப்பட்டதில் இருந்து பிராந்திய கட்சியான தமாகா தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படும் கட்சியாகவே தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமாகாவின் கருத்துக்களை முறையாக கேட்டு தமிழகத்தின் நலனுக்காக இந்த இயக்கம் மத்தியில் பாடுபடும் என்ற நம்பிக்கையோடு இந்த முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.