திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 61 ஆயிரத்து 238 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 10 லட்சத்து 47 ஆயிரத்து 48 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 13 ஆயிரத்து 872 பெண் வாக்காளர்களும், 318 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 12-ம் தேதி முதல் டிசம்பர் 11-ம் தேதி வரை பெறப்பட உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 17 வயதைப் பூர்த்தி செய்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. இதற்கிடையே, அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2027-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.