Rock Fort Times
Online News

மணப்பாறை தொகுதி விவசாயிகளைச் செழிப்பாக்கும் பொன்னணியாறு இணைப்புத் திட்டம்! முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்ற எம்.எல்.ஏ. கதிரவன்..!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே அமைந்துள்ளது பொன்னணியாறு அணை. 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நோக்கத்தில், 1975-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியால் இவ்வணை கட்டப்பட்டது. அதிகமாக மழை பெய்யும் நேரத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால் மட்டுமே பொன்னணியாறு அணை நிரம்பும். மழை இல்லாத சாதாரண நாட்களில் வறண்டே காணப்படும். ஆகவே, அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலானாலும், கட்டப்பட்டதன் முழுமையான நோக்கம் இன்னும் நிறைவேறவே இல்லை. மேலும், பொன்னணியாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் கரூர் மாவட்டத்திலும், பாசனப் பரப்புகள் திருச்சி மாவட்டத்திலும் உள்ளன. எனவே, இரண்டு மாவட்ட நிர்வாகங்களும் பொன்னணியாறு அணை விஷயத்தில் தொடர்ச்சியாக மெத்தனமாகவே இருந்து வருகின்றன. விளைநிலங்கள் செழிக்க, கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து பொன்னணியாறுக்கு காவிரி ஆறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். பொன்னணியாறு முதல் மாயனூர் கதவணை வரை மொத்தமுள்ள 54 கிலோ மீட்டர் தூரத்திற்கும் குழாய் பதித்து, காவிரி நீரைப் பொன்னணியாற்றுடன் இணைப்பது குறித்து ஏற்கெனவே விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான நிதி மற்றும் நிர்வாக அனுமதி மத்திய, மாநில அரசுகளிடமிருந்து கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 11) மாமல்லபுரத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஆர்.கதிரவன், சி.எம். விஜயிடம் இதுகுறித்துப் பேசியுள்ளார். காவிரி – பொன்னணியாறு இணைப்புத் திட்டத்தின் அவசியத்தையும், அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் ஏற்படப்போகும் மாற்றத்தையும் எம்.எல்.ஏ. விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்ட முதலமைச்சர், “பொன்னணியாறு இணைப்புத் திட்டம்” குறித்து சின்சியராக நோட் செய்துகொண்டதாகவும் தெரிகிறது. ஆகவே, கூடிய சீக்கிரத்தில் காவிரி – பொன்னணியாறு இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் கிரீன் சிக்னல் கொடுப்பார் எனத் தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்