கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள பனையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (44). இவர், பா.ஜ.க. கரூர் பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் பொறுப்பில் உள்ளார். இவர், தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை எடிட் செய்து தவறாக சித்தரித்து பதிவிட்டிருக்கிறார். மேலும், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் கரூர் மாவட்ட துணைத் தலைவராக உள்ள தீபக் என்பவரின் புகைப்படத்தையும் இணைத்து தவறான கருத்துக்களை பதிவிட்டதாக தெரிகிறது. சமூகவலைதளங்களில் பரவிய இந்த புகைப்படங்களை பார்த்த தீபக், முதல்வர் குறித்து தவறான புகைப்படத்தை பதிவிட்ட முருகேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்டதற்காக பா.ஜ.க நிர்வாகி முருகேசனை கரூர் நகர காவல் நிலைய போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.