Rock Fort Times
Online News

தமிழகத்தில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஐடி ரெய்டு-முக்கிய ஆவணங்கள் சிக்கின…

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னிபாளையம் முத்துகவுண்டர் (எ)குழந்தைசாமி. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர், சிறு வயதில் ஜவ்வரிசி வியாபாரம் செய்தார். சில ஆண்டுகளிலேயே ஜவ்வரிசி தொழிலில் பெரிய அளவில் உயர்ந்தார். பிறகு ‘சி.எம்.கே’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினார். பின்னர், அவரது மகன்களான சி.கே.வெங்கடாசலம் மற்றும் சி.கே.பாலசுப்பிரமணியன் கட்டுப்பாட்டில் நிறுவனம் வந்தது. இருவரும் கடந்த 1999ல் சி.எம்.கே. ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் தொடங்கினர். அதன் பிறகு சி.எம்.கே. டிரேடிங் நிறுவனம், கிரீன் பில்ட் ஹவுசிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், சி.எம்.கே. புரமோட்டர்ஸ், டிரினேவா இன்ப்ரா புராஜெக்ட்ஸ் என அடுத்தடுத்து நிறுவனங்கள் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். சகோதரர்களான இவர்கள் சேலம் மாவட்ட அதிமுக முக்கிய பிரமுகர் மூலம் அதிமுக ஆட்சியின் போது பல முக்கிய அரசு ஒப்பந்தங்களை எடுத்து கட்டுமான பணிகள் பல செய்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை சி.எம்.கே. கட்டுமான நிறுவனம் தான் கட்டியது. அதிமுக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களை அதிகளவில் எடுத்த நிறுவனங்களில் சி.எம்.கே. நிறுவனமும் ஒன்று என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2022-23 மற்றும் 2023-24ம் நிதியாண்டில் சி.எம்.கே. குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் ஆண்டு வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து புத்தாண்டு பிறந்த 2 வது நாளான நேற்று ஒரே நேரத்தில் சி.எம்.கே. குழுமத்திற்கு சொந்தமான தலைமை அலுவலகங்கள், உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னையில் சி.எம்.கே. குழுமத்திற்கு சொந்தமான ஷெனாய் நகரில் உள்ள அலுவலகம், கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் உள்ள அலுவலகம், அண்ணாநகர் 10வது மெயின் ரோட்டில் உள்ள அலுவலகம், அமைந்தகரையில் உள்ள கட்டுமான நிறுவனம் மற்றும் சி.எம்.கே. நிறுவன உரிமையாளர்களான வெங்கடாசலம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான ஈரோடு, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான கிளை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் சி.எம்.கே. குழுமத்தில் இருந்து பல நூறு கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பல கோடி ரொக்க பணம், நகைகள், தமிழ்நாடு, கேரளாவில் பல்வேறு கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபால், சென்னை எழும்பூரில் உள்ள பாபு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 5 இடங்களிலும் சோதனை நடந்தது. எழும்பூர் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கோவை நகர், புறநகரில் நேற்று 10 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 17 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தனித்தனியாக காலை முதல் மாலை வரை இந்த சோதனையில் ஈடுபட்டனர். பட்டணம் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், சூலூர் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனர் வீடு, நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் குடியிருப்புகள், காளப்பட்டியில் செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் பம்பு தொழில் செய்யும் நிறுவன உரிமையாளர் ஒருவரின் வீடு, அலுவலகம் என 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.வரி ஏய்ப்பு, பல்வேறு வருவாய் இனங்களை மறைத்தது, போலியான கணக்கு காட்டியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்