ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கை 3 மாதத்தில் முடிக்க நீதிபதி அதிரடி உத்தரவு…!
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார். இதுதொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்ததால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, உடல் நிலையை கருத்தில் கொண்டு தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருப்பதால், செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக 30 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்தநிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று(28-2-2024) தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் 8 மாதங்களாக சிறையில் இருப்பதாக தெரிவிப்பதால் வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். 3 மாதத்தில் வழக்கை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால் என்ன நடக்கப் போகிறதோ என்று செந்தில் பாலாஜி தரப்பினரும், திமுகவினரும் அதிர்ச்சியில் உள்ளனர். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 முறையும், உயர்நீதிமன்றத்தில் 2 முறையும் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.