தற்போதைய நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க சாத்தியமில்லை- நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தகவல்…!
தற்போதைய நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க சாத்தியமில்லை என தமிழக நீர்வளத் துறை தலைமை முதன்மை பொறியாளர் அசோகன் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணையில் மொத்தமுள்ள 41 ஷட்டர்களையும் ரூ.16 கோடியில் முழுவதுமாக சீரமைக்க பொதுப் பணித்துறை முடிவு செய்தது. இதற்கான பணிகள் கடந்த ஜனவரியில் தொடங்கின. மொத்தம் 6 ஒப்பந்தக் குழுக்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக நீர்வளத் துறை தலைமை முதன்மை பொறியாளர் அசோகன், முக்கொம்பு மேலணை மற்றும் கல்லணை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். முக்கொம்பு மேலணையின் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த அவர், எஞ்சியுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தியதுடன், சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
அப்போது அவர் மேட்டூர் அணை திறப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போதைய நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க சாத்தியமில்லை. அணை திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், முக்கொம்பு மேலணை பணிகள் முடிந்து, ஒருவாரத்தில் திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, திருச்சி பொதுப்பணித் துறை ( நீர்வளத் துறை) பொறியாளர்கள் பலர் உடனிருந்தனர்.
Comments are closed.