தஞ்சையில் இன்று (மே 18) நடைபெற்ற திருவாரூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், இல்ல திருமண விழாவில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியுற்றதை முன் வைத்து, பலர் திமுக-வின் கதை முடிந்துவிட்டதாக கூறி வருகிறார்கள். ஆனால், திமுக இதுவரை எத்தனையோ தேர்தலை பார்த்துள்ளது. பல தேர்தல்களில் திமுக வெற்றியை கண்டுள்ளது. அதேபோல், பல தேர்தல்களில் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஆனால், தோல்வி அடையும் நேரத்தில்தான், திமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவையை போல மீண்டும் நிமிர்ந்து எழுந்து நிற்கிறது. இங்கு பேசியவர்கள் பலர் சோகத்தில் இருப்பதை நான் பார்க்கிறேன். மேடையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, எதிரில் இருக்கக் கூடியவர்களும் சோகத்தில் உள்ளனர். நாம் சோகத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம்தான் இப்போதும் ஆட்சியில் இருக்கிறோம்.
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக-விடம், திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தொடரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். நாம் வைத்த கோரிக்கை, இன்றைக்கு நிறைவேற்றப்பட்டு இருப்பதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. நம்முடைய இந்த திட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வரை, நாம் தான் தமிழ்நாட்டை ஆளுகிறோம் என அர்த்தம். எனவே, இந்த தேர்தலில் திமுக தோல்வியுற்றதைக் கண்டு நான் சிதறி போகவில்லை; மனம் உடைந்தும் போகவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய ஓர் குழுவை தயார் செய்துள்ளோம். இந்த ஆய்வில் நம்மிடம் உள்ள குறை என்ன? மக்களின் எதிர்பார்ப்பு என்ன? ஏன் இந்த தோல்வி? என்பதை ஆராய்ந்து வருகிறோம். இதற்காக, ‘உடன் பிறப்பே வா’ என்கிற இணையத்தை உருவாக்கி உள்ளோம். அதில், அனைவரும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். த.வெ.க., இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்துள்ளது. குறிப்பாக, சிறுவர்களை பரப்புரை செய்ய வைத்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். இங்கு நம்முடைய கணிப்பு சரியாக வேலை செய்யவில்லை. வரும் நாட்களில் இதையும் முறியடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தோல்வி, வெற்றி இரண்டையும் சமமாகக் கருதி, திமுக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.